இளம் இந்தியா இமாலய வெற்றி * பெண்கள் ‘டி–20’ உலக கோப்பையில் | ஜனவரி 16, 2023

தினமலர்  தினமலர்
இளம் இந்தியா இமாலய வெற்றி * பெண்கள் ‘டி–20’ உலக கோப்பையில் | ஜனவரி 16, 2023

பெனோனி: ‘டி–20’ உலக கோப்பை (19 வயது) தொடரில் இந்திய பெண்கள் அணி இரண்டாவது வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் யு.ஏ.இ., அணியை 122 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

தென் ஆப்ரிக்காவில் ஐ.சி.சி., 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான முதல் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்றது.

நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற யு.ஏ.இ., அணி பீல்டிங் தேர்வு செய்தது. 

அசத்தல் துவக்கம்

இந்திய அணிக்கு கேப்டன் ஷபாலி வர்மா, ஸ்வேதா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஸ்வேதா பவுண்டரி மழை பொழிய, மறுபக்கம் ஷபாலி சிக்சர்களாக விளாசினார். இருவரும் அரைசதம் எட்டினர். முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 111 ரன் சேர்த்த போது ஷபாலி (78 ரன், 34 பந்து) அவுட்டானார். 

ரிச்சா 29 பந்தில் 49 ரன்னுக்கு வெளியேறினார். திரிஷா (11) நிலைக்கவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 219 ரன் குவித்தது. முதல் போட்டியில் 92 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்த ஸ்வேதா நேற்றும் (74 ரன், 49 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.

அபார பவுலிங்

கடின இலக்கைத் துரத்திய யு.ஏ.இ., அணிக்கு தீர்த்தா, லாவண்யா ஜோடி துவக்கம் தந்தது. ஷப்னம் வீசிய முதல் ஓவரின் முதல் 4 பந்தில் 4 பவுண்டரி அடித்த தீர்த்தா (16) அடுத்த பந்தில் அவுட்டானார். யு.ஏ.இ., அணி 2 ஓவரில் 31/1 ரன் எடுத்தது. பின் சமைரா (9), ரினிதா (2) வீழ்ந்தனர். மஹிகா (26), ரன் அவுட்டானார். கடைசியில் லாவண்யா (24) வெளியேற, யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 97/5 ரன் மட்டும் எடுத்தது. 122 ரன்னில் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி ‘சூப்பர்–6’ சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. 

மற்றொரு போட்டியில் வங்கதேச அணி (165/2), இலங்கையை (155/4) 10 ரன் வித்தியாசத்தில்  வென்றது. 

 

219

ஐ.சி.சி., 19 வயது ‘டி–20’ உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்சில் 200 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் அணியானது இந்தியா. நேற்று யு.ஏ.இ., அணிக்கு எதிராக இந்தியா 219/3 ரன் குவித்தது. 

இதற்கு முன் இங்கிலாந்து 199/4 (எதிர்–ஜிம்பாப்வே), இந்தியா 170/3 (எதிர்–தெ.ஆப்.,) அணிகள் முதல் இரு இடத்தில் இருந்தன.

மூலக்கதை